சனி, 19 ஜூலை, 2025

வாழ்க்கை சிறக்க சில எளிய விஷயங்கள்..

வாழ்க்கை சிறக்க சில எளிய விஷயங்கள்..


வாழ்க்கை சிறக்க அந்தந்த தருணத்திற்கு ஏற்றபடி உணர்வுபூர்வமாக முழுமையான விழிப்புணர்வுடன் வாழ்வதுதான் சிறந்தது. நம்மிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருப்பதைக் கண்டால் பொறாமை கொள்வதும், அதனை அடைந்தே தீரவேண்டும் என்று போராடுவதும் வாழ்வில் நிம்மதியை தொலைக்கும் விஷயங்கள். எனவே மற்றொருவருடன் ஒப்பிட்டு பார்த்து வேதனைப்படுவதை தவிர்க்க வேண்டும். ஒப்பிடுவதால்தான் போட்டி பொறாமை எல்லாம் உருவாகிறது. இந்த வேண்டாத எண்ணங்களை மனதிலிருந்து நீக்கிவிட வாழ்வு நிச்சயம் சிறக்கும்.

வாழ்க்கை சிறக்க பல விஷயங்கள் முக்கியம். உடல் நலம், மனநலம், நம்மைச் சூழ்ந்த உறவுகள் என பல அம்சங்கள் வாழ்க்கையில் நன்கு அமைய வேண்டும். உடலுக்குத் தேவையான சத்துள்ள ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதும், போதுமான உறக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வதும் உடல் நலத்தை மேம்படுத்த உதவும். உடலுக்கும் மனதிற்கும் சம்பந்தம் உண்டு என்பதால் உடலை பேணிக் காக்க மனமும் சிறப்பாக செயல்படும். இதற்கு தியானம் மூச்சுப் பயிற்சி போன்றவை உதவும்.


எப்பொழுதும் நல்ல எண்ணம் கொண்டு நேர்மறையாக சிந்திப்பதும், பிறர் மனம் புண்படாதவாறு நடந்து கொள்வதும், பிறரை மதிக்க கற்றுக் கொள்வது போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும் வாழ்க்கை சிறப்பாக இருக்க உதவும். திறமைகளை வளர்த்துக் கொள்வதும், ஆன்மீக சிந்தனைகள், நல்ல செயல்கள், தியானம், வழிபாடு போன்றவை வாழ்வில் ஒரு நல்ல சமநிலையை ஏற்படுத்தி மன அமைதியைத்தரும். வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு, சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவது போன்றவை நம் வாழ்க்கையை செம்மையாக்கும்.

ஈதலும் இசை பட வாழ்தலும்' - வறியவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் புகழ்பெற்று வாழ்வதே வாழ்க்கை என்று வள்ளுவப் பெருமான் கூறுகிறார். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சூழ்நிலையைப் பொறுத்து வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. ஒரே சூழலில் ஒரே இடத்தில் இருக்கும் அனைவரும் ஒரே உணர்வுடன் இருப்பதில்லை, ஒரே சூழ்நிலையிலும் இருப்பதில்லை என்பதை உணரவேண்டும்.

மனம் மகிழ்ச்சியாக இருக்க நல்ல உறவுகள் அமைவதும், பிரச்னைகளை சமாளிக்கும் திறன் பெற்றிருப்பதும் வாழ்வு சிறக்க மிகவும் அவசியம். பிறருக்கு துன்பம் தராமல் நம் விருப்பப்படி வாழ்வதே சிறந்த வாழ்க்கை. கடமையை செய்யத்தான் வேண்டும். அதற்காக நம் சந்தோஷங்களை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பது ஒரு வாழ்க்கை அதை அனுபவித்து வாழ்வோமே!

சிறப்பான வாழ்வு என்பது நம்முடைய மனதை எது நிறைவு செய்யுமோ அதுவே ஆகும். அவரவர்க்கு அதுவே செல்வம். அதனை அடைவதே சிறப்பு. மனநிறைவு ஒன்றே வாழ்வு சிறக்க வழிவகுக்கும். வாழ்க்கை என்பது ஒரு அழகான பயணம். அதில் நாம் நிற்காமல் முன்னேறி போய்க்கொண்டே இருக்கவேண்டும். உலகில் சிறந்த வாழ்க்கை என்பது அவரவர் மனதிற்கு பிடித்த மாதிரி நல்ல முறையில் வாழ்வதே ஆகும்.
Previous Post
Next Post

0 Comments: