உணவு குறித்த விழிப்புணர்வு தற்போது பெருகி வருவதைப்போல உணர்வுகளைப் பற்றிய கருத்து, கவலை மற்றும் கலாச்சாரம் இவைகளும் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மாறி வருகிறது. ஆம் இவைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிதான் நமது மன ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியமாக வெற்றிக்கும் அவசியமாகிறது.
இந்த உணர்வு கலையை ஒரு தோட்டக்கலைக்கு ஈடாக ஒப்பிடலாம். காரணம் இது ஒரு அழகான தோட்டத்தை உருவாக்க, களைகளை பிடுங்கி சீர் செய்து நீர் பாய்ச்சி விலங்கினங்கள் நுழையாமல் பேணிக்காப்பது போல நமக்குள் ஊறும் உதவாக்கரை உணர்வுகளை வளரும் முன்னே கிள்ளி எறியவேண்டும். ஆரோக்கியமான நேர்மறை உணர்வுகளை வளரவிட வேண்டும்.
நமது உடலில் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் எவ்வளவு முன்னேற்பாடுகளுடன் தயாராகிறோம். அதே போல்தான் நமது உணர்வுகளை கையாளுவதற்கும் நமது முழு மனோசக்தியை உபயோகிக்க வேண்டும்.
ஏதோ ஒன்று நம்மை முடக்கி போட்டு விடுகிறது அது நமது முந்தைய தோல்விகளாகவும் இருக்கலாம் அல்லது மனம் வருந்த தக்க சம்பவங்களாகவும் இருக்கலாம். எதிர்பாராத இழப்பு தந்த சில விபத்துகள்கூட காரணமாக இருக்கலாம்.
தொடர் உடல் நலக்குறைவுகளும் சில சமயங்களில் காரணமாக இருந்திருக்கின்றன. இவை அனைத்தையும் கடந்து வரும் மனவலிமை இன்றி அதையே நினைத்து வருந்தினால் நமது செயல்திறன்தான் குறையும்.
நம் உணர்வுகள் சரியாக கையாளப்படாவிட்டால் அவைகளே நமது வாழ்க்கைக்கு வில்லன்களாக இருக்கக்கூடும் என்ற மனோவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த உணர்வுகளை கையாளுவதற்கான ஒரு அணுகுமுறை இங்கு. அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள மன வலிமையை அதிகரித்துக் கொள்ளுதல்தான் அது.
அதிர்ச்சியை தாங்கக்கூடிய முதல் சாதனம் வாழ்க்கையின் மீது நாம் கொண்டுள்ள ஒரு பார்வை அல்லது தத்துவம் ஆகும். தூரத்திலிருந்து ஒரு மலையை நாம் பார்க்கலாம். அது அழகான நீல நிறத்தில் வரையப்பட்ட ஒரு ஓவியம்போல வெண் பஞ்சு மேக கூட்டம் சூழ அட்டகாசமாக தெரியும். வெகு அருகே சென்று காணும்போது எங்கு பார்த்தாலும் ஒரே கூர்மையான பாறைகள் கையை வைத்தால் காயப்படுத்தும் வகையில் இருக்கும்.
இவை எல்லாம் தூரத்தில் இருந்து நம் கண்களுக்கு தெரிவதில்லை அப்பொழுது நம் கண்களுக்குபட்ட அழகு பொய்தானே.? வாழ்க்கையும் அதேபோலதான் தூரத்திலிருந்து பார்த்தால் வாழ்க்கை அழகாகத்தான் இருக்கிறது. சிறிய சிறிய கஷ்டங்களை பெரிதாக்கிக் கொள்ளாமல் ஒரு பெரும் அழகின் ஒரு மிகச்சிறு அங்கமாக கவனத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்றாக அந்த பழைய நினைவுகளை நாம் எடுத்துக்கொண்டு அதை அகற்றப் பழகுவோமே?
ரோஜா மலரின் முள்தானே அதனை இதழ்களின் மென்மையைக் கூட்டிக் காண்பிக்கிறது வாழ்க்கையின் மீது ஒரு அகன்ற பார்வை தேவை. அது பெரும்பாலான சமயங்களில் ஒரு ஆழ்ந்த அமைதியை தருகிறது. வாழ்க்கையின் பல கோணங்கள், எண்ணற்ற ருசிகள் வாழ்க்கையை நன்றாக சுவைக்க உதவுகின்றன. வாழ்க்கையை நன்றாகவே வாழ்ந்து காட்டுவதற்கு வைராக்கியம் தேவை.
அந்த வைராக்கியம் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். நமது பழைய நினைவுகளையும் அகற்றுவதில் இருந்தால் வெற்றிதான்.
0 Comments: