நேற்று செய்த தவறை ஒப்புக்கொண்டால் இன்று நீ அறிவாளியாவாய் - இது சாரதா தேவியார் கூறியது.
தவறுகள் செய்யாத மனிதர்களே இல்லை. சிலர் அவர்களையும் அறியாமல் செய்யும் தவறுகளை மன்னித்துவிடலாம். தவறுதான் என்று தெரிந்தும். தவறு செய்பவர்களை மன்னிக்கவே முடியாது.
தவறு செய்யாமல் வாழமுடியாதா? எதற்காகத் தவறு செய்ய வேண்டும்! அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இப்படித் தனக்குள்ளே கேள்விகள் கேட்டு உணர்ந்து கொண்டவர்கள் மட்டுமே தவறுகளைச் செய்ய அஞ்சுவார்கள்.
தவறு செய்யப்பயப்படுபவர்கள் கோழைகள் அல்ல. அவர்கள்தான் சிறந்த மனிதர்கள் ஆவார்.
எதற்கெடுத்தாலும் தவறு செய்யும் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாது. தற்சமயம் வேண்டுமானால் மகிழ்ச்சிக் கடலில் நீந்தலாம். பிறகு அதிலேயே மூழ்கிக் காணாமல் போய்விடுவார்கள்.
தவறு செய்துவிட்டு மனசாட்சிக்குப் பயந்து பாவமன்னிப்புக் கேட்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள். ஆனால் மன்னிப்பு கேட்டு விட்டோம். இனிமேல் என்ன என்று தொடர்ந்து தவறு செய்பவர்களும் இருக்கிறார்கள்.
ஒருவன் மது குடிக்கிறான். அளவுக்கு அதிகமாகவே குடித்துவிடுகிறான். போதையில் தள்ளாடுகிறான். தெருவில் வந்து தைரியசாலி போல் வீரவசனம் பேசுகிறான். அவன் அப்படி நடந்து கொள்வது அவனுக்கு வேண்டுமானால் அழகாய் இருக்கலாம்.
ஆனால், அனைவரும் அவனை அருவருப்பாகத்தான் பார்ப்பார்கள். அந்தப் போதை அவனின் பாதையை மாற்றிவிடும்.
நல்ல சிந்தனை, நல்ல செயல்களைச் செய்பவர்களுடன் சேரவேண்டும். அப்பொழுதுதான் உயர்ந்த சிந்தனையும். செயலும் பிறக்கும்.
எத்தனை காலம்தான் வெள்ளையனுக்கு நாம் அடிமையாகவே இருப்பது. நாமும் சுதந்திரக் காற்றைவாசிக்க வேண்டும் என்று எழுந்த உணர்வுதான் சுதந்திரம் ஆகும்.
வாழ்க்கை முழுவதும் எதற்கும் அடிமையாகவே வாழவேண்டுமா. மனிதன் பிறக்கும்போது. எதற்கும் யாருக்கும் அடிமையாகப் பிறப்பதே இல்லை.
தவறுகளைத் தெரிந்தே பழகிக்கொள்கிறான். பின் மீளாத் துயரில் விழுந்து விடுகிறான். அவனால் ஒதுங்கிச் செல்லமுடியும். அத் தவறுகளில் இருந்து மீண்டு வெளியே வரமுடியும்.
அதற்கு அவன் முயற்சி செய்யவேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல், தம்மைத் திருத்திக்கொள்ளவே முடியாது.
செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது! அதில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற முயற்சியும் வேண்டும். தவறு எனத் தெரிந்தே செய்வதை உடனே நிறுத்தி விடவேண்டும்.
மெல்ல நிறுத்துவது என்பது முடியாத செயலாகும். அது ஒரு வகை நொண்டிச் சமாதானம் ஆகும். இப்படிப்பட்ட உள்ளம் முழுமையாய் அதில் இருந்து வெளியே வரவே முடியாது.
இப்படித் தொடர்ந்து வெளியே வரத்துடிக்கும் எண்ணத்துடன், அவற்றிற்கு அடிமையாகவும் இருப்பதை என்னவென்று சொல்வது.
இதேபோல் சாலை விதிகளைக் கடைப்பிடித்துச் செல்லவேண்டும் எனத் தனக்குள் நினைப்புது உண்டு. ஆனால் சில நேரங்களில், சாலை விதிகளைக் கடைப்பிடித்துச் செல்வது இல்லை.
ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் செயலையும் தெரிந்தே செய்து கொண்டிருக்கிறோம். தெருவில் குப்பைகளைக் கொட்டி துர்நாற்றம் வீசச் செய்கிறோம். கண்டபடி சிறுநீர் கழித்தும், மலம் கழித்தும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். இதனால் பொது மக்களின் சுகாதாரம் பாதிக்கும் என்பதெல்லாம் தெரிந்தும், தொடர்ந்து செய்கின்ற தவறுகள்தானே!
இதற்காகவெல்லாம் அரசாங்கம், தனித்தனியே அழைத்து மக்களுக்கு அறிவுரை சொல்லமுடியாது.
அனைவரும் தம்மைத் திருந்திக்கொண்டாலே போதும் தவறுகளும் திருத்தப்படும். அதற்குண்டான ஞானத்தெளிவும் பிறக்கும்.
0 Comments: