உங்கள் உடன் பணிபுரிவோர், அக்கம் பக்கத்தில் வசிப்போர், உறவினர் மற்றும் நண்பர்கள் என பல தரப்பட்ட மனிதர்களுடன் நீங்கள் பழகிவருவீர்கள். அவர்களுள் ஒரு சிலருக்கு உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் வருத்தப்படாமல், அவர்களை எவ்வாறு கையாள்வது என்பதற்கான சில ஆலோசனைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
உங்கள் மீது காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் காட்டுபவர்கள் பொதுவாக தன்மீதுள்ள வெறுப்பையும், தனக்கு ஏற்பட்ட முன் அனுபவங்களையும் பாதுகாப்பின்மையையும் முன்னிறுத்தவே அதைப் பிறர் மீது காண்பிப்பார்கள்.
எனவே அதை நீங்கள் சிறிதும் கண்டுகொள்ளாமல் விலகியிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் எதிர்மறையான செயல்களை நீங்கள் உள் வாங்கிக்கொள்ளாமல் இருப்பது உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், எந்தவிதமான எதிர்வினையாற்றும் எண்ணத்தை மாற்றியமைக்கவும் உதவும்.
பிறரின் எதிர்மறையான செயல்கள் உங்களின் சக்தியை குறையச் செய்வதாயிருப்பின், அதற்கு நீங்கள் ஒரு வலுவான எல்லைக் கோட்டை அமைத்துக்கொள்வது சிறப்பு. அப்போது, அவர்களின் ஒவ்வொரு முடிவில்லா விவாதங்களிலும் நீங்கள் பங்கேற்க வேண்டிய தேவை இருக்காது. அமைதியான முறையில், ஓர் இடைவெளியை உண்டுபண்ணிக் கொண்டு, தேவையின்றி எதிர்வினையாற்றாமல் இருப்பதே விஷமிகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி. இதனால் உங்கள் நிம்மதியும் பறிபோகாது.
மற்றவரின் எதிர்மறை எண்ணங்களும் வெறுப்பும் உங்களை அவர்கள் அளவுக்கு தாழ்ந்து போய்விட ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம். அமைதியாகவும் அன்போடும் சூழ்நிலையை கையாளும்போது, அது உங்கள் பலத்தையும், அறிவு முதிர்வையும் கட்டுப்பாடான உணர்வுகளையும் வெளிப்படுத்தும். இதற்குப் பின்னும் அவர்கள் நடத்தையில் மாற்றம் வரவில்லையெனில், உங்கள் கொள்கைகளை வலுவாகப் பற்றிக்கொண்டு அவ்விடத்தை விட்டு விலகி விடுங்க.
ஒருவர் உங்கள் மீது வெறுப்பைக் கொட்டிக்கொண்டே இருக்கும்போது, அதை மனதில் வைக்கவே வேண்டாம். அதே நேரம் உங்கள் மீது உண்மையான அன்பையும் கவனிப்பையும் செலுத்தும் நபர்களுடன் அதிக நேரம் செலவிட தயங்காதீர்கள். இது உங்கள் மதிப்பை உயர்த்தவும், உங்கள் முன்னேற்றத்திற்கு வழி காட்டவும் உதவும்.
வாழ்க்கைப் பயணம் மிக நீண்டது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களை விரும்பியே ஆகவேண்டுமென்ற கட்டாயமில்லை. இதைப் புரிந்துகொண்டு, விஷமிகளை விட்டு விலகி இருப்பதே நிம்மதியான வாழ்வுக்கு வழி. இதனால் நீங்கள் தோற்று விட்டதாக அர்த்தமில்லை. நீங்கள் நடிப்பதைத் தவிர்த்து வாழ்க்கைக்கு மிக முக்கியத் தேவையான அமைதியைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என அர்த்தமாகும்.
0 Comments: